﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா.நாகசாமி</author>
<book>பொய்யிலி மாலை</book>

<title><line>முளை ஞாயிறு</line></title>

<para>
<image display="half" float="floatnone" caption="முளை ஞாயிறு">images/IMG_3297.jpg</image>
<text>
குடந்தைக் கீழ்கோட்டத்து கூத்தபிரானை அப்பர் பெருமான் பாடியுள்ள பின்வரும் பாடல் எழில் வாய்ந்த பாடல். பாடிப்பாடி இன்புறத்தகும் பாடல்.
</text>
</para>

<para>
<verse>
<line>முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த்தோன்றும்</line>
<line number="2">முளை ஞாயிறன்ன மலர்க்கண்கள் மூன்றும்</line> 
<line>அடிகொண்ட சிலம்பொலியும் அருளாற்சோதி</line>
<line number="2">அணிமுறுவல் செவ்வாயும் அழகாய்த்தோன்றத்</line>
<line>துடிகொண்ட விடை மடவாள் பாகங்கொண்டு</line>
<line number="2">சுடர்ச்சோதி கடல் செம்பொன் மலைபோலிந்நாள்</line>
<line>குடிகொண் டென்மனத்தகத்தே புகுந்தார் போலும்</line>
<line number="2">குடந்தைக் கீழ்க் கோட்டத்தென் கூத்தனாரே</line>
</verse>
</para>

<para>
<text>
என்பது அவ்வெழில் பாடல். இப்பாடலில் கடல் மலைபோல் தோன்றியது என்னும் அழகான சொல் வழக்கைக் காண்கிறோம். சுடர்ச்சோதிக்கடல் செம்பொன் மலைபோல் காட்சியளிக்கிறது என்கிறார் அப்பர் பெருமான். இவ்வெழிற்பாடலிலே "மூன்றாய்த்தோன்றும் முளைஞாயிறன்ன - மலர்க்கண் மூன்றும்" என்று வந்துள்ளது. 
</text>
</para>

<para>
<text>
இதற்கு அருணை வடிவேல் முதலியார் அவர்கள் பின்வருமாறு பொருள் கொண்டுள்ளார்.
</text>
</para>

<para>
<text>
"மூன்றாய்த் தோன்றும் கண்கள் என இயையும் முளை ஞாயிறன்ன என்றது தொழில் பற்றி வந்த உவமை. மூன்று கண்கள் யாதொன்று திறப்பினும் சிறிது திறத்தலே அன்றி முழுதும் திறப்பின் உலகம் ஆற்றுவதில்லை, என அவற்றின் ஆற்றல் மிகுதியை உணர்த்தியவாறு அன்ன ஆற்றலை உடையவராயினும் மென்மையில் பிறழா என்பர்" என்று பொருள் வரைந்துள்ளார்
</text>
</para>

<para>
<text>
மலர்க்கண்கள் என்பது மலர்ந்த கண்கள் என்றே பொருள் கொள்ளுதல் சிறப்பெனத் தோன்றுகிறது. மலர்ந்த புஷ்பங்கள் கண்ணுக்கு இன்பம் அளிப்பதுபோல, சிவபெருமானின் மலர்க்கண்கள் மூன்றும் மக்களுக்கு பேரின்பம் அளிப்பவை என்பது பொருள். சிவபெருமானின் கண்கள் சிறிதே திறந்திருப்பின் மலர்க்கண்கள் என்ற சொல்வழக்கும் தவறே. வழுவுடையதாகக் கொள்ளவேண்டி வரும். அதனால் இயல்பான பொருளான "மலர்ந்த கண்கள்" என்னும் பொருளே சிறப்புடைத்து. அவ்வாறாயின் "மூன்றய்த்தோன்றும் முளைஞாயிறன்ன" என்பதின் பொருள்தான் யாது? எனில் "மூன்றாய்த்தோன்றும் என்பதை முளைஞாயிறு என்பதுடன் இயைத்துப் படித்தல் வேண்டும். "முளை ஞாயிறு" என்பது உதிக்கின்ற சூரியனைக் கூறுகிறது. அது மூன்றாய்த் தோன்றுகிறது என்பது பொருள்.  
</text>
</para>

<para>
<text>
சைவ சமயத்தில் "நமசிவாய" என்ற பஞ்சாக்ஷர மந்திரத்தை உள்ளடக்கியுள்ள ஸ்ரீருத்ரம் என்னும் யஜுர்வேதப் பகுதி மிகமிகத் தலையாயது என்பது யாவரும் அறிந்ததே. தொன்றுதொட்டே இது சிவாலயங்களில் சிறப்பாக ஜபிக்கப்பட்டு வந்தது. ருத்ரபசுபதி நாயனார் என்று 63 நாயன்மார்களில் ஒருவர் ருத்ரம் ஜபித்து வீடுபேறு பெற்றார் என்பதை நாம் அறிவோம். ருத்ரம் சிவபெருமானின் பெரும் புகழையும், சிறப்பயையும் கூறுகிறது. இதை வேதத்தின் சாரம் என்று கூறுவர். ருத்ரத்தில் ஒரு மந்திரம் வருகிறது. 
</text>
</para>

<para>
<text>
"அசௌ ய: தாம்ர: அருண: உத பப்ரு: சுமங்கள:" என்று அது கூறுகிறது. இதன் பொருள் சிவபெருமான் தாம்ர வர்ணத்திலும், அருண வர்ணத்திலும், பப்ரு என்ற வர்ணத்திலும் தோன்றுகிறான் என்பது பொருள். இதற்குப் பொருள் எழுதிய சாயணர், சூரியன் உதிக்கின்றபோது மிகவும் [கரும்] சிவந்த வண்ணமாகத் தோன்றுவதை "தாம்ர வர்ணம்" என்றும், அதன் பின்னர் அருண வண்ணத்தில் இளம் சிவப்பாகத் தோன்றுவது.  பிறகு வெளுத்த சிவப்பு, பப்ரு வண்ணம் என்றும் பொருள் கொண்டுள்ளார்.
</text>
</para>

<para>
<text>
எனவே உதிக்கின்ற சூரியனின் மூன்று வண்ணங்களை வேதம் கூறுகிறது. இவ்வாறு உதிக்கின்ற சூரியன் சிவபெருமானே என்பது இவ்வேதத்தின் பொருள். ஆதலின் முளைக்கின்ற ஞாயிறு மூன்று வடிவில் தாம்ரனாகவும், அருணனாகவும், பப்ருவாகவும் தோன்றுகிறான் என்கிறது வேதம்.
</text>
</para>

<para>
<text>
இதிலிருந்து "மூன்றாய்த் தோன்றும் முளைஞாயிறு" என்பதின் பொருள் தெளிவாகப் பெறலாம். மாறாக மூன்றாய்த் தோன்றும் என்பதைப் பிரித்து கண்களோடு இயைப்பது சற்று வலிந்து பொருள் கொள்வது மட்டுமல்ல, வழக்குடை சொல் வழக்கென ஆகிவிடும். ஆதலின் தேவாரப்பாடலில் உள்ளபடியே "மூன்றாய்த் தோன்றும் முளைஞாயிறு" என்று பொருள் கொள்வதே சிறந்த பொருள் பயப்பது. சிவபெருமானின் கண்கள் சிறிதுதான் திறந்திருக்கும் என்ற பொருந்தாத பொருளும் தேவையில்லை. இதே கீழ்க்கோட்டத்து மற்றொரு பாடலில் அப்பர் பெருமான் 
</text>
</para>

<para>
<verse>
<line>செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி</line>
<line>செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்</line>
</verse>
</para>

<para>
<text>
என்று பாடுகிறார். இங்கும் மூன்று வண்னங்கள் குறிக்கப்படுகின்றன. செக்கர் ஒளி, பவளஒளி, மின்னின் சோதி என்ற மூன்று வகை சிவப்பு வண்ணங்கள். இவ்வாறு தோன்றும் செழும் சுடர்த் தீயாகிய ஞாயிறுபோல் சிவந்தவர் சிவபெருமான் என்பது பொருள் எனத் தெளியலாம். மற்றொரு இடத்தில் அப்பர் சுவாமிகள் போற்றும் "காலை முளைத்த கதிரே" என்பதும் இதையே உணர்த்தும். "மூன்றய்த்தோன்றும் முளை ஞாயிறு" என்பதின் பொருளை ஸ்ரீருத்ரத்திலிருந்து தெளிவு பெறுகிறோம்.  
</text>
</para>

</article>
